'ஜல்லிக்கட்டில் விலங்கு வதை இருக்கிறது'- இந்திய விலங்கு நல வாரியத் துணைத்தலைவர்
Share
Subscribe
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் மீது துன்புறுத்தல் இல்லை என்ற வாதத்தை அகில இந்திய விலங்கு வாரியத் துணைத்தலைவர் சின்னி கிருஷ்ணா மறுத்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில், விலங்கு உரிமை ஆர்வலர்கள், இந்த விளையாட்டு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பெரும் வலியை ஏற்படுத்துகிறது என்ற அடிப்படையில் வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களோ, இது போன்ற சம்பவங்கள் இந்த விளையாட்டு அரசு கட்டுப்பாட்டுக்கு வராத போது நடந்திருக்கலாம், ஆனால் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக அரசின் கண்காணிப்பில் இந்த விளையாட்டு நடந்துவரும் நிலையில், இது போன்ற துஷ்பிரயோகங்கள் நடப்பதில்லை என்று கூறினர்.
இந்த வாதம் சரியானதுதான என்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்குத் தொடுத்த இந்திய விலங்கு நல வாரியத்தின் துணைத்தலைவர் சின்னிகிருஷ்ணா அவர்களிடம் பிபிசி தமிழோசை கேட்டபோது, இதில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது ஓரளவு முன்னேற்றம் இருந்திருக்கலாம் , ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவின் படி, தங்கள் குழு 2011லிருந்து 2013 வரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை வீடியோ பதிவு செய்த போது கூட பல சந்தர்ப்பங்களில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டது கண்கூடாகத் தெரிந்தது. இந்த வீடியோ பதிவுகளைப் பார்த்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் , விலங்குகள் துன்புறுத்தப்படாத ஜல்லிக்கட்டே இருக்க முடியாது என்று கூறினர், என்றார்.
சில நாட்டு காளையின ரகங்கள் அழிந்துபோகாமல் காக்கப்படவேண்டுமெனால், ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படவேண்டும் என்ற வாதத்தையும் நிராகரித்த சின்னி கிருஷ்ணா, துன்புறுத்தி விளையாடினால் மட்டுமே ஒரு காளையின ரகத்தைக் காப்பாற்ற முடியும் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வாதமல்ல என்றார்.
குதிரைப் பந்தயத்தில் குதிரைகள் துன்புறுத்தப்படுவது போன்றவற்றை விலங்கு உரிமை ஆர்வலர்கள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த சின்னி கிருஷ்ணா, குதிரைப் பந்தயத்தில் குதிரைகளை ஜாக்கிகள் சாட்டையால் அடித்து ஓட வைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்கு நல வாரியம் மனு தொடுத்து அதை உச்சநீதிமன்றம் ஏற்று சாதகமாகத் தீர்ப்பளித்ததை நினைவு கூர்ந்தார். இப்போதெல்லாம், காற்றடைக்கப்பட்ட குஷன் சவுக்குகளால் மட்டுமே, அதுவும் ஒரு பந்தயத்தில் எட்டு முறை மட்டுமே , குதிரைகளை , குதிரை ஓட்டுநர்கள் அடிக்க முடியும், மீறினால் அவர்கள் பந்தயத்தில் கலந்துகொள்ள தகுதியிழப்பார்கள் என்று சுட்டிக்காட்டினார் அவர்.
அதே போல கோவில்களிலும், கோவில் விழாக்களிலும் யானைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராகவும் விலங்கு நல வாரியம் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
