'உயர்கல்வி நிறுவனங்களில் தலித் விரோத மனப்பான்மை இருக்கிறது'

Jan 20, 2016, 03:29 PM

Subscribe

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வேமுலா தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், குறிப்பாக அறிவியல் துறையில், தலித் மாணவர்களுக்கு எதிரான மனப்போக்கு இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார், சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தின் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சி.லக்ஷ்மணன். தலித் மாணவர்களுக்கு நெறியாளர்களைத் தருவதில் இழுத்தடிப்பது, அவர்கள் 'கோட்டாவில்' ( இட ஒதுக்கீட்டுமுறையில்) உள்ளே வந்தவர்கள் என்று குரோத மனப்பான்மையுடன் பார்ப்பது போன்றவை தொடர்ந்து நிலவுவதாக அவர் கூறுகிறார். உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு வித சாதியக் கட்டமைப்பு இருப்பதாகக் கூறும் அவர், இது விளிம்பு நிலை மாணவர்களை, குறிப்பாக தலித் மாணவர்களைத் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்குத் தள்ளுவதாகக் கூறுகிறார். இந்தச் சூழல் 1990களின் பின் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளால் கூர்மையடைந்ததாகவும் அவர் கூறுகிறார். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒன்பது தலித் மாணவர்கள் இறந்திருக்கிறார்கள் என்றார் அவர்.

இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில், கடந்த ஆண்டு பாஜகவின் மாணவர் அமைப்புடன் ஏற்பட்ட மோதலை அடுத்து , ஐந்து தலித் மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், பல்கலைக்கழக ஹாஸ்டலுக்கு வர முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறிய அவர், இந்த விஷயத்தில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பல்கலைக்கழகத்துக்கு நான்குமுறை நினைவூட்டல் கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார். அரசியல் தலையீடே இந்த நிலைக்கு இட்டுச் சென்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.