மனித உரிமை மீறல் விசாரணை: மைத்திரி-ரணில் மோதல்?

Jan 27, 2016, 06:04 PM

Subscribe

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை அரசுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது. அப்படியான விசாரணைகள் எதிலும் வெளிநாட்டவர் யாரும் இடம்பெறமாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பன்னாட்டு வல்லுநர்கள் உள்வாங்கப்படும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்கபதற்கு இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால் தேசிய சகவாழ்வு கலந்துரையாடலுக்கான அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பில் அரசு இன்னும் அதிகாரபூர்வமான நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை, விரைவில் அமைச்சரவை கூடி அது முடிவு செய்யப்படும் என அவர் கூறுகிறார். இலங்கை கூட்டு அனுசரணையாளராக இருந்து, ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேறிய தீர்மானத்தை செயல்படுத்த வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.