ஜனவரி 27, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 27, 2016, 06:24 PM

Subscribe

இன்றைய (27-01-2016) பிபிசி தமிழோசையில்

இலங்கை உள்நாட்டுப் போரின் பாரிய மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு இருக்கும் என்கிற இலங்கை அரசில் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று பிரதமர் ரணில் தெரிவித்திருப்பது குறித்து தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனின் செவ்வி;

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ளவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சக செயலாளர் தலைமையில் உயர் மட்டக் கூட்டம் ஒன்று நடந்திருப்பது குறித்த செய்தி;

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என்கிற அடையாளம் இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

தென்னிந்திய இஸ்லாமிய மதபோதகர் ஜெய்னுல் ஆப்தினுக்கு இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;

தமிழ்நாட்டின் திருச்சியில் வரும் 31 ஆம் தேதியன்று மாநில அளவிலான 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' ஒன்றை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' நடத்த தடை விதிக்க வேண்டுமென, சுலைமான் மன்பை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் வழக்கு தொடுத்துள்ள, அந்த அமைப்பின் அமைப்பாளரான சுலைமான் மன்பையின் செவ்வி;

'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும், அதன் அமைப்பாளரான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைவர் பக்கிர் முஹம்மத்தின் மறுப்பு;

இரானிய அதிபர் ஹஸ்ஸான் ருஹானி ஃபிரான்ஸ் செல்கிறார். மேற்குலகத்துடன் இரானின் உறவை மீளக்கட்டியமைக்கும் முயற்சியிலான அவரது பயணம் தொடங்கியுள்ள நிலையில் ஃபிரான்ஸ்-இரான் உறவின் கடந்தகாலத்தை திரும்பிப் பார்க்கும் பிபிசியின் செய்திக்குறிப்பு;

நைஜீரியப் பெண்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டு பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக ஸ்பெய்ன் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளது குறித்த பிபிசியின் செய்திக்குறிப்பு ஆகியவற்றைக் கேட்கலாம்.