புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டுவிட்டன- நாராயணசாமி

May 29, 2016, 04:29 PM

Subscribe

புதுச்சேரி யூனியன் பிரதேசத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் திமுக தலைவர் மு.கருணாநிதியை சென்னையில் சந்தித்து , கூட்டணிக் கட்சியின் ஆதரவு கோரினார். பிபிசி தமிழோசையிடம் பேசிய நாராயணசாமி, 30 பேர் கொண்ட அவையில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு 17 பேர் இருப்பதால் தங்களால் ஒரு ஸ்திரமான ஆட்சியைத் தரமுடியும் என்று கூறினார். முன்பிருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 15 உறுப்பினர்களுடன் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில், ஆறு மாதங்களுக்குள் ஒரு இடைத்தேர்தலில் நின்று போட்டியிட்டு வென்றாக வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், அது குறித்து என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இது குறித்து கட்சித் தலைவர்களுடன் பேசி ஒரு முடிவு செய்யப்படும் என்றார் நாராயணசாமி. ஆனால் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல் வெளியிலிருந்து முதல்வராக வருவது கட்சிக்குள் கசப்புணர்வைத் தூண்டவில்லை என்றும், கட்சியின் தலைவரும் தானும் இது குறித்து பேசி இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறினார்.