தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் உள்கட்டமைப்பு சிரமங்கள்
Share
Subscribe
மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலம். 1995-ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்கள் இங்கே இருக்கின்றன. இருந்தபோதும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்டங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த முடியாத வகையிலேயே இருக்கின்றன.
தமிழகத் தேர்தல் முடிவடைந்த பிறகு, சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்றத்திற்கு வந்து சென்ற பிறகு பேசிய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகள் வரமுடியாத வகையிலேயே சட்டமன்றம் இருப்பதாகத் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கென குறிப்பிடத்தக்க சட்டங்கள் 1995-ஆம் ஆண்டிலிருந்தே இருக்கின்றன. சமூக நலத் துறையின் கீழ் இருந்த மாற்றுத் திறனாளிகள் துறை, 2008-ஆம் ஆண்டில் தனித்துறையாகவும் மாற்றப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் எல்லா பொதுக் கட்டிடங்களையும் மாற்றுவதற்கான 2012-ஆம் ஆண்டின் சட்டம், சாய்வுதளம், தனிக் கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை கட்டாயமாக்கினாலும், தமிழகத்தின் தலைநகரிலேயே 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் அம்மாதிரி வசதிகள் கிடையாது.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் 3 அமைப்பின் மாநிலத் தலைவரான தீபக், ஒருவர் ஊனமாக இருப்பது அவருடைய தவறு என்ற வகையிலேயே பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தின்போது, சக்கர நாற்காலியில் இருந்தபடியே சட்டமன்றத்திற்குள் செல்ல முடியாது என்பதால் தான், சட்டமன்றத்திற்கு வரவில்லை எனக் குறிப்பிட்டார் கருணாநிதி. சட்டமன்றம் மட்டுமல்ல, தமிழக தலைமைச் செயலகத்திற்குள் செல்வதற்கும் பெரும்பாலான இடங்களில் சாய்வான தளம் கிடையாது.
இது குறித்து பேசிய தலைமைச் செயல ஊழியர் ஒருவர், தமிழகத் தலைமைச் செயலகம் செயல்படும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் சக்கர நாற்காலியோடு நுழைவதற்கு சாய்தளம் பல இடங்களில் கிடையாது என்று சுட்டிக்காட்டினார்.
இத்தனைக்கும் தலைமைச் செயலகத்தில் 70-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பணிபுரிகின்றனர். நடக்கும் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் நிலையே இவ்வாறு இருக்கும்போது, பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் சிக்கலான நிலையை எதிர்கொள்கின்றனர்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய இந்திய பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவர் மனோகரன், தங்களது பிரச்சனைகள் புரிந்துகொள்ளப்படுவதுகூட இல்லை என்கிறார்.
பொதுக் கட்டங்களைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் ஒருபுறமென்றால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும் பிரச்சனைகள் இருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள பேருந்துகள் அனைத்துமே உயரமான படிகளைக் கொண்டவை என்பதால், அதில் மாற்றுத் திறனாளிகள் மிகுந்த சிரமத்துடனேயே ஏற வேண்டியிருக்கும். சென்னை மின்சார ரயில்களில் எளிதில் ஏறிவிட முடியும் என்றாலும், ரயில் நிலையங்களுக்குள் செல்வதற்கு பெரும் எண்ணிக்கையிலான படிகளைக் கடந்தாக வேண்டும். பெரும்பாலான மின்சார ரயில் நிலையங்களை அடைவதற்கு நகரும் படிக்கட்டுகளோ, மின் தூக்கிகளோ கிடையாது.
2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இது 1.6 சதவீதமாகும். ஆனால், உண்மையில் மாற்றுத் திறனாளிகளின் சதவீதம் பல மடங்கு அதிகம் என்கிறார்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
ஆனாலும் , இவர்களுக்கான பொருளாதார ரதியான சலுகைகளை அளிப்பதில் கவனம் செலுத்தும் மாநில அரசு, அவர்கள் மற்ற எல்லோரையும்போல வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவில்லை என்ற குறை மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கிறது.
