உடற்பருமன் மற்றும் போஷாக்கின்மையால் அவதிப்படும் இந்தியர்கள்- உலக ஊட்டச்சத்து அறிக்கை 2016
Share
Subscribe
2016ம் ஆண்டின் உலக ஊட்டச்சத்து அறிக்கை, உலக நாடுகளில் 44 சதவீத நாடுகளில் போஷாக்கின்மை மற்றும் உடற்பருமன் இரண்டு பிரச்சனைகளாலும், அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது. 129 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மூன்றில் ஒருவர் ஏதோ ஒரு வகைப் போஷாக்கின்மையால் அவதிப்படுவதாகக் கூறுகிறது.
இந்தியாவை பொருத்தவரை போஷாக்கின்மை மற்றும் உடற்பருமன் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிகின்றனர். தமிழக அரசின் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் ஊட்டச்சத்து துறை மருத்துவர் மீனாக்ஷி பஜாஜிடம் பேசியபோது, ''இந்தியாவில் 22 சதவீத மக்கள் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உடற் பருமன் பிரச்சனையுடன் 4.9 சதவீத மக்கள் அவதிப்படுகிறார்கள். பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் துரித உணவுகளை பெருமளவு உட்கொள்கின்றனர். உணவு உண்ணும் அளவிற்கு ஏற்றவாறு உடல் பயிற்சி செய்வதில்லை,'' என்றார்.
மேலும் உடற்பருமன் தான் இந்தியாவில் நீரிழிவு நோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது என்றார். ''12 வயதுள்ள குழந்தைகளை நீரிழிவு நோய்க்காக நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்,'' என்றார்.
தமிழகத்தில் அரசு உடற் பருமன் குறித்த விழிப்புணர்வு முகாம்களை முதலில் மருத்துவ பணியாளர்களுக்கு நடத்தியுள்ளது என்றும் ஊட்டச்சத்து துறையில் பயிலும் மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்றார்.
