எம்.பி பதவியை ராஜிநாமா செய்ய முடியாது: சசிகலா புஷ்பா திட்டவட்டம்

Aug 01, 2016, 04:39 PM

Subscribe

தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா விவகாரம் இன்று மாநிலங்களவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை சபை கூடிய உடன் உறுப்பினர் சசிகலா புஷ்பா, சில தினங்களுக்கு முன்பு தில்லி விமான நிலையத்தில், தி.மு.க சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடன் ஏற்பட்ட மோதல் குறித்து சபையில் விளக்கம் அளித்தார். விமான நிலையத்தில் உறுப்பினர் திருச்சி சிவாவை அடித்தது தவறு என்றும் அதற்காக அவரிடமும், அக்கட்சியின் தலைவரிடம் மன்னிப்பு கோருவதாக கூறினார். மேலும், தன்னை பதவி விலகக் கோரி அ.இ.தி.மு.கவின் செயலாளர் ஜெயலலிதா கட்டாயப்படுத்தியதாகவும், தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கண்ணீர் மல்க பேசினார். இதனைத் தொடர்ந்து, மதியம் தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு கட்சித் தலைமையால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் தான் எக்காரணத்தை கொண்டும் ராஜிநாமா செய்யப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.