ரியோ ஒலிம்பிக் 8-வது நாள்: பதக்க வாய்ப்புகளை தக்க வைக்குமா இந்திய அணி?
Share
Subscribe
ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக தங்கப்பதக்கத்தை சிங்கப்பூர் வென்றுள்ளது. அதுவும் சாதாரண வெற்றியல்ல, சாம்பியனை வீழ்த்தி இந்த கெளரவத்தைப் பெற்றிருக்கிறது.
வெற்றிகரமான ஒலிம்பிக் வீரர் என கருதப்படும் அமெரிக்காவின் மைக்கெல் பெல்ப்ஸை நீச்சல் குளத்தில் சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
ஜோசப்பின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவருடைய தந்தை கோலின் ஸ்கூலிங், தங்களுடைய மகன் குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
''1948ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த உறவினர் ஒருவர்தான் சிங்கப்பூருக்காக முதன் முதலாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். தற்போது, ஜோசப் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேனா, இல்லையா என்பதை கிள்ளிப் பார்க்கப் போகிறேன். வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம்'' என்றார் அவர்.
சிங்கப்பூர் நீச்சல் சங்கத்தின் தலைவர் எட்வின் கெர், ஜோசப்பின் இந்த வெற்றி சிங்கப்பூர் மக்களை ஒன்றிணைத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.
''கடந்த 51 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவை ஜோசப் மற்றும் அவனது பெற்றோர் நிறைவேற்றி உள்ளனர். இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் ஜோசப் ஒன்றிணைத்துள்ளார். ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகனும் அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்'' என்று எட்வின் கெர் கூறியுள்ளார். நீச்சல் போட்டிகளின் கடைசி நாளில் நடைபெற உள்ள நூறு மீட்டர் மெட்லெ ரிலே பிரிவில் பெல்ப்ஸ் 23வது தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ரியோவுக்கு பிறகு மைக்கெல் பெப்ல்ஸ் ஓய்வு
இந்த போட்டிகளுக்குப் பிறகு நிரந்தர ஓய்வு பெற உள்ளதாக மைக்கெல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கேட்டி லிடெக்கி, பெண்களுக்கான போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
800 மீட்டர் ஃப்ரி ஸ்டைல் இறுதிப் போட்டியில் உலக சாதனையை அவர் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்ற வட கொரியா
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.பளுதூக்குதல் போட்டியில் வடகொரியாவின் ரிம் ஜோங் சிம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் மற்றும் மார்க் லோபஸ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
தோல்வி முகத்தில் இந்தியா
ஆண்களுக்கான 20 மீட்டர் நடை போட்டியின் இறுதி சுற்றில் இந்தியாவின் மனிஷ் சிங் 13வது தர நிலையை பெற்று தோல்வியை தழுவினார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்றில் 50 – ஆவது தர நிலையை பெற்று இந்தியாவின் டுட்டி சந்த் தோல்வியை தழுவினார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா வீரர் அங்கித் ஷர்மா தோல்வியை தழுவியுள்ளார்.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா வீரர் முகமது அனாஸ் அரை இறுதி சுற்றுக்கான தகுதி சுற்றில் தோல்வியை தழுவினார்.
இன்னும் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள்
தொடர் தோல்விகளை இந்தியா சந்தித்தாலும், ரியோவில் இந்தியா பதக்கம் பெறுவதற்கு வாய்ப்புகளும் உள்ளன.
ஆண்கள் குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் உஸ்பெகிஸ்தான் வீரரை காலிறுதி போட்டியில் எதிர்கொள்கிறார்.
கலப்பு இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் ரோஹன் போபண்ணா மற்றும் சானிய மிர்சா ஜோடி ஆண்டி மர்ரீ மற்றும் ஹீத்தர் வாட்சன் ஜோடியை 6–4, 6–1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்
3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியாவின் லலிதா பாபர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
