இளங்கன்று ஒன்று வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே: வைரமுத்து உருக்கம்
Share
Subscribe
தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியாரான நா.முத்துகுமார் இன்று உயிரிழந்தார். அவருடைய இறப்பை தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து இரங்கல் இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது.
நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன்.
