ரியோ ஒலிம்பிக் 9வது நாள்: தங்க மகன் மைக்கெல் பெல்ப்ஸ்

Aug 14, 2016, 04:17 PM

Subscribe

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், ஒன்பதாம் நாளான இன்று பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மகளிர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற ஜமைக்க நாட்டு வீராங்கனை எலைன் தாம்சன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தனது 23-வது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையிலான அமெரிக்க நீச்சல் விளையாட்டு அணி, ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் 4x100 மீட்டர் மெட்லெ தொடர் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. 23-வது தங்கப்பதக்கத்தை வென்ற மைக்கேல் பெல்ப்ஸ், இத்துடன் தான் நீச்சல் விளையாட்டிலிருந்து ஒய்வு பெறப் போவதாக தெரிவித்தார். ஆண்கள் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில், பிரிட்டன் வீரர் மோ ஃபாக் தங்கப் பதக்கம் வென்றார். இன்று நடந்த மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில், உக்ரேனின் மரியா உல்டினாவிடம், 18-21, 19-21 என்ற நேர் செட்களில் தோற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ரியோ ஒலிம்பிக்ஸின் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் போட்டி பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார். கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில், சாய்னா நேவால் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் போட்டி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, பதக்க பட்டியலில், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.