அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்: மக்கள் மகிழ்ச்சி

Sep 04, 2016, 04:11 PM

Subscribe

இந்தியாவின் கொல்கத்தா மாநகரில் 19 ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த அன்னை தெரஸா, இன்று, செப்டம்பர் 4 ஆம் நாள், வத்திக்கானில் நடைபெற்ற பிரமாண்ட திருவழிபாட்டில் கத்தோலிக்க திருச்சபையின் புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார். போப் பிரான்சிஸ், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரகடனத்தை அறிவித்தர்.

மூவொரு இறைவனின் அதிகாரத்தோடு, உயர்வான கத்தோலிக்க நம்பிக்கையோடு, நிரம்பிய கிறிஸ்தவ ஒளியோடு இறைமகன் இயேசு கிறிஸ்து, திருத்தூதர்களான பேதுரு, பவுல் மற்றும் எங்களுடைய அதிகாரத்தால், நீண்ட சிந்தனையாலும், இறைவனின் உதவிக்கான இடைவிடா செபத்தாலும், எங்களுடைய சகோதர வெளிநாட்டு ஆயர்களின் ஆலோசனைகளை பெற்றிருக்கும் நிலையில், கொல்கத்தா அருளாளர் தெரசாவை புனிதராக பிரகடனம் செய்கிறோம்.

அவரை முழு திருச்சபையும் வணங்கி மரியாதை செலுத்தும் வகையில் புனிதர்களின் கூட்டத்தில் அவருடைய பெயரை சேர்க்கின்றோம்.

தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமேன்.
என்று போப் பிரான்சிஸ் கூறி அருளாளர் அன்னை தெரஸாவை கொல்கத்தா புனித தெரஸாவாக பிரகடனம் செய்தார்.

1,500 வீடில்லாத மக்கள், 13 நாட்டு தலைவர்கள், இந்திய வெளியுறவு அமைச்சரின் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு, டெல்லி முதலமைச்சர், மேற்கு வங்க முதலமைச்சர், இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு மதங்களின் தலைவர்கள் வத்திக்கானில் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெற்ற இந்த புனிதர் பட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

பசித்தோருக்கு, ஆடையின்றி இருப்போருக்கு, வீடிழந்தவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, பார்வையற்றோருக்கு, தொழுநோயாளிகளுக்கு, விரும்பத் தகாதவர்களுக்கு, அன்பு கிடைக்காதவர்களுக்கு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு, சுமையென கருதப்படுகிறவர்களுக்கு மற்றும் அனைவராலும் தவிர்க்கப்படுவோர்களுக்கு ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்தி தன்னலமற்ற பணியாற்றிய அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட்டவுடன் இந்தியாவில் கொல்கத்தாவில் அவருடைய கல்லறையை சுற்றியிருந்த நூற்றுக்கனக்கானோர் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

கெல்கத்தா புனித தெரஸா இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற அன்பின் பணியை அடையாள சொற்களால் புனித தெரசாவின் மேற்கோளை சுட்டிகாட்டி போப் பிரான்சிஸ் விளக்கினார்.

அவரை புனித தெரஸா என்று அழைப்பது நமக்கு கடினமாக தோன்றலாம் என்று எண்ணுகிறேன். அந்த அளவுக்கு அவருடைய புனிதம் நம்மோடு நெருக்கமாக இருந்தது. மிகவும் இதமாக, கம்பீரமாக, சரளமாக அன்னை தெரஸா என்றே தொடர்ந்து அழைப்போம்.

நம்முடைய செயல்களின் ஒரேயொரு வரையறையானது, கருத்தியல் மற்றும் எல்லா கடமைகளிலிருந்து அப்பாற்பட்ட, மொழி, கலாசாரம், இனம் அல்லது மத வேறுபாடுகள் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுகிற, தன்னலமற்ற அன்பு என்கிற புரிதலை, நம்மில் அதிகரிக்க இந்த இடைவிடாமல் பணியாற்றிய இறைஇரக்க பணியாளர் நமக்கு உதவட்டும். “ஒருவேளை நான் அவர்களின் மொழியை பேசாமல் இருக்கலாம். ஆனால், புன்னகை பூக்கலாம்” என்று கூறுவதை அன்னை தெரஸா மிகவும் விரும்பினார். அவருடைய இந்த புன்னகையை, சிரிப்பை நம்முடைய உள்ளத்தில் சுமந்து செல்வோம். நம்முடைய வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திப்போருக்கு, குறிப்பாக இன்னலில் உழல்வோருக்கு அந்த புன்னகையை, சிரிப்பை வழங்குவோம். என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

அன்னை தெரஸாவின் பணிகளை பாராட்டி, வாழும் புனிதர் என்று அப்போதே அவரை அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அன்பின் ஊற்றாகவும், மனித நேய மாண்பாளராகவும் விளங்கிய அன்னை தெரசாவின் புகழையும் பெருமையையும் போற்றிடும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியதை திமுக தலைவர் மு. கருணாநிதி முகநூலில் நினைவு கூர்ந்துள்ளார்.

புனித தெரஸாவின் பணி பற்றி அருட்கன்னியர் செஃபாபானோ கேட்டபோது,

சாதாரண காரியங்களை அசாதாரண அன்போடு, இரக்கத்தோடு உலகிலுள்ள அனைவருக்கும் செய்தார். இது உலகம் முழுவதுக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஆன்மீக மாதிரி என்று தெரிவித்தார்.

கொல்கத்தா புனித தெரஸாவின் சொந்த நாடான அல்பேனியாவிலிருந்து வந்த எட்வர்டு கோஸ்நீஸ், புனித தெரஸாவை இந்த உலகிற்கு வழங்கியதற்காக பிரார்த்திக்க வந்திருக்கிறேன். அவர் எங்கள் நாட்டை சேர்ந்தவர். உலகின் எல்லா மக்களுக்கும் அன்பு சுதந்திரம் கிடைக்க பிரார்த்திக்க இருக்கிறேன் என்று கூறினார்.

ஆனால், அவர் ஏழை இந்துக்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்ற முயன்றார் என்றும், சமூகப் பணிகளை செய்தாரே தவிர,. சமூக சீர்திருத்தப் பணிகளை அல்ல என்றும் அவர் மீது விமசனங்கள் வைப்போரும் உள்ளனர். இருப்பினும், வாழும் புனிதரை வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறோம். அவர் எமது உள்ளத்தைத் தொட்டிருக்கிறார். பிறரின் சிரிப்பில் இறைவனைக் காண கற்று தந்தார் என்று புனிதராக அறிவிக்கப்பட்ட அன்னை தெரஸா போற்றப்படுகிறார்.