பாலின சர்ச்சையில் பதக்கம் பறிக்கப்பட்ட தடகள வீராங்கனை சாந்திக்கு அரசு வேலை கிடைத்துள்ளது குறித்த பேட்டி
Share
Subscribe
பாலின சர்ச்சையால் ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கம் பறிக்கப்பட்ட தமிழக தடகள வீராங்கனை சாந்தி, தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கபடவுள்ளார். தமிழக தடகள வீராங்கனை சாந்தி (கோப்புப்படம்) அதற்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, அவரின் பதக்கத்தை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது தமிழக அரசு தனக்கு வேலை அளித்திருப்பதை பெரும் வெற்றியாகக் கருதுவதாக பிபிசியிடம் தெரிவித்தார் சாந்தி. ''இந்த அறிவிப்பு, எனக்கு வாழ்க்கையில் மீண்டும் புத்துணர்வை அளித்துள்ளது. பயிற்சியாளர் வேலை எனக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுக்கும். நான் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கத் தயாராவேன். 10 ஆண்டுகளாக அன்றாட வாழக்கையை நடத்த மிகவும் சிரமப்பட்டேன். செங்கல் சூளையில் கூலி வேலை செய்ய நேர்ந்தது, '' என்றார் சாந்தி. சாந்தியின் வழக்கிற்கு தமிழக அரசின் ஆதரவு குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மாபாஃய் பாண்டியராஜனிடம் கேட்டபோது, ''கிராமப் புறத்தில் இருந்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒரு பெண் விளையாட்டுத் துறையில் முன்னேறியுள்ளார். அவருக்கு வெளிநாட்டில் சோதனை நடந்த போது, சோதனை நடத்தியவர்களிடம் தனது கருத்தை பதிவு செய்ய அவருக்கு தமிழ் மொழி தவிர வேறு மொழிகள் தெரியாது. இந்த நிலையை விளக்கி, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும். சாந்தி உழைத்துப் பெற்ற பதக்கத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
