ஆண்களை விட பெண்கள் அதிகம் உழைக்கும் நிலை குறித்த பேட்டி
Share
Subscribe
உலக அளவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஆண்களைவிட பெண்கள் 39 நாட்கள் கூடுதலாக உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த போக்கு கூடுதலாக இருக்கிறது. இந்திய ஆண்களைவிட இந்திய பெண்கள் ஆண்டுக்கு ஐம்பது நாட்களுக்கும் மேல் கூடுதலாக உழைப்பதாக இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 50 நிமிடங்கள் அதிகம் உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பின் பாலின சமத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய பெண்கள் அதைவிட இரண்டுமடங்கு நேரத்துக்கும் அதிகமாக உழைப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சராசரியாக இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு 120 நிமிடங்கள் ஆண்களைவிட அதிகம் வேலை செய்வதாக இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊதியமற்ற வேலை என்பது மிகப்பெரும் சுமையாக உலக அளவில் பெண்களை அழுத்துவதாகவும் இருபாலருக்கும் இடையிலான பொருளாதார சமனற்ற நிலைமை மாறுவதற்கு 170 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம் உழைக்கும் நிலை குறித்து சமூக ஆர்வலர் கீதாவிடம் கேட்டபோது, ''பொதுவாக பெண்கள் குடும்பத்தினருக்கு உதவுதல், குழந்தைகளை பெற்று வளர்த்தல், சிறு தொழில் செய்வது என பல மணி நேரம் உழைக்கிறார்கள். ஆனால் பலர் அவர்கள் வேலை செய்வது தங்களுக்கு விதிக்கப்பட்ட ஒன்று என்றும் பெண் என்பதாலே அவர்கள் அவ்வாறு கடுமையாக உழைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.'' பெண்கள் வீடுகளில் செய்யும் வேலைக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றி கேட்டபோது,''பெண்கள், தங்களது குழந்தைகள் , அதாவது, எதிர்கால உழைப்பாளர்களை உருவாக்குகிறார்கள். இதற்காக அவர்களுக்கு பெரிய அளவில் எந்தவித அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. குடும்பங்களில் சமத்துவம் தேவை. குடும்பத்தில் சமத்துவம் பெருகினால் தான் அது, சமூகத்தில் பெண்களுக்கு அவர்களின் உழைப்பிற்கான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாகும்,'' என்றார்.
