கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை- ‘’தேச பக்தி உள்ளவர்கள் ஏற்பார்கள்``-இல.கணேசனின் பேட்டி
Share
Subscribe
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி பி.ஜே.பி அரசு கடந்த வாரம் 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது குறித்து, பி. ஜே.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான இல. கணேசன் பிபிசிக்கு அளித்த பேட்டியில், '' இந்த முடிவால் பொது மக்களுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் இந்தச் சிரமத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். தேச பக்தி உள்ளவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு வேறு கருத்து இருக்கலாம்,'' என்றார். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கிகளில் பணம் எடுப்பவர்களின் விரல்களில் மை வைக்கும் நடைமுறை தமிழகத்தில் இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் ஏ.டி எம் களில் பணம் எடுக்கும் அளவு ரூ.4,500ல் இருந்து ரூ.2,000ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது போன்ற புதிய விதிமுறைகள் தினமும் அறிமுகப்படுத்தப்படுவது பற்றிக் கேட்டபோது, ''பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு அரசு முடிவுகளை எடுத்து வருகிறது. தற்போது திருமண செலவுகளுக்கு பணம் எடுக்க போதிய ஆதாரங்களுடன் பொது மக்கள் பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது,'' என்றார். இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ரூ.7,000 கோடி மதிப்பிலான வராக் கடனை தள்ளுபடி செய்வதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கேட்டபோது, ''இது தவறான கருத்து. வராக் கடனை தள்ளுபடி செய்யபோவதில்லை என்றும் அந்த பணம் நிச்சயம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார். வராக் கடனை எழுதும் முறையில் தான் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது,'' என்றார்
