நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணியின் பேட்டி
Share
Subscribe
இந்திய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த உத்தரவு வரவேற்க தக்கது என்றும் இது தனது கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார்.
''சமுதாயத்தின் அனைத்து சீரழிவுகளுக்கும் முதன்மைக் காரணம் மது தான் என்பதால் அதை அடியோடு ஒழிப்பதற்காக மக்கள் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வருகிறது. மக்கள் போராட்டத்தின் பயனாக தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை ஏற்படுத்தப்போவதாக அரசு அறிவித்து, முதல்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடியுள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளும் மதுவிலக்குக்கு ஆதரவாக செயல்பட எங்களின் போராட்டம் தான் காரணம்,'' என்றார்.
அவர் மேலும்,'' தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இவர்களில் சுமார் 15,000 முதல் 16,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்களின்படி சாலை விபத்துக்களில் 25 முதல் 30 விழுக்காடு விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகின்றன. உச்சநீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்பின் மூலம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களும், உயிரிழப்புகளும் குறையும்,'' என்றார்.
