ஜோதிமணி மீதான இணையத்தில் பாலியல் தாக்குதல் தொடர்பாக பா.ஜ.கவின் பதில்

Jan 05, 2017, 06:05 PM

Subscribe

செல்லாமல் ஆக்கப்பட்ட 500 மற்றும் 1,000 நோட்டுகள் பிரச்சனை 50 நாளில் முடிவுக்கு வரும் என்று அறிவித்த பிரதமர் மோதியின் வாக்குறுதி செயல்பாட்டிற்கு வரவில்லை என்று ஜோதிமணி பதிவிட்ட பிறகு, இணையத்தில் தன் மீதான பாலியல் தாக்குதல் தொடங்கியது என்கிறார். ஜோதிமணியின் புகார் குறித்து தமிழிசை சௌந்தரராஜன், ''ஜோதிமணி சந்தித்த இணைய வழியான பாலியல் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த செயல்களில் ஈடுபட்டவர்களாக இருந்தால் அவர்களை கண்டிக்கும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன்,'' என்றார்.

ஜோதிமணியின் புகாரை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், தனது கட்சியினர் மட்டும் தான் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக சொல்வது தவறு என்கிறார் தமிழிசை. ''ஜோதிமணி பிரதமர் மோதியைக் கண்டித்து எழுதிய விதத்தால் சிலர் கோபமுற்று இது போல நடந்திருக்கலாம். அவற்றை சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் எல்லோருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்று சொல்வது தவறு,'' என்றார். அவர் மேலும், ''பாஜகவினர் இதுபோல அவதூறு பரப்புவதற்காக ஒரு படையை வைத்துள்ளனர் என்றும் அதற்காக பயிற்சி தரப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதை ஏற்க முடியாது. எங்களது கட்சி மிக நாகரீமான கட்சி,'' என்றார்.