என்ற ஊரு..

Mar 07, 2017, 10:16 AM

நாங்கள் வளர்ந்து மரமாக; மரமாய் கனி கொடுக்க; உரம் சேர்த்த அன்னை, பார்தால் பசி போக்கும் பசும் சோலையாக தேத்தா மரங்கள் நிழல்தந்த தேத்தாத்தீவு தான் எங்கள் தேனூர்க் கிராமம்

தோட்டமும் தொரவும் வயலும் வாய்காலும் கடலும் களப்பும் குளமும் குட்டையும் கலையும் சிலையும் அலையும் அழகும் நிலமும் நீருமென வளம் பல கொண்ட ஊரு!!

அன்று சாணமிட்ட திண்ணையில் சாய்ந்து கேட்ட தாலாட்டு; ஓலை வேய்ந்த கூரைக்குள் உரத்து பெய்த மழையேசை; கோயிலடி மதியப் பொங்கல் கொள்ளி சுமக்க மதிரங்கட்டு; மாலை நேர ஆத்தங்கரையில்-களி மண் சுமந்த பொழுதுகள்;

மூட்டான் மூட்டானாய் கொழுந்து பறித்த நாட்கள்; மூட்டை மூட்டையாய் நெல்லுச் சொரிந்த ஆட்கள்; ஆட்டை வளர்த்து ஆரோக்கியமாய் உண்டோம்! மாட்டை வளர்த்து வயலை உழுதோம்! வேட்டையாடி வீசிப்பிடிக்க கடலும் ஆறும் கரைகளாய் நிலைத்தன- இதுகள் எல்லாம் வாழ்வாதாரத்தை மேவிய பொருளாதாரமாக இருந்தது..

களறி கட்டி கூத்தாடினோம் மகிடி வைத்து மகிழ்திருந்தோம் சீனச் பெருஞ்சுவர்போல் பலமாய் இருந்தது- எங்கள் தேனூர் கிராமத்தில் உறவு முறை.....

ஒருத்தருக்கு ஒருத்தராய் ஒத்தாசையாய் இருந்து வாழ்ந்தோம்! வருத்தம் வலி வந்தால் வாசல் நிறய சனங்கள் நிற்கும்! அந்நியமாய் இருந்தாலும் அந்நியோன்யமாய் பழகினோம்!! ஊருக்கு தலைவரை உள்ளத்தில் வைத்து போனோம்!! எத்தனை இன்பம் ஊரில்!! எத்தனை சொந்தம் ஊரில்!! எத்தனை மகிழ்ச்சி ஊரில் !!

இன்று, வளர்ந்து விட்டது ஊரு!! தஞ்சை கொண்ட பெருங்கோயிலாய் கொம்புச்சந்தி பிள்ளையார்! ஆடு மேய்ந்த எம்ஊரில் ஓடுவேய்ந்த உயர் மாடிகள்; வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் விரும்பிய வேலையில் கெட்டிக்காரர்கள்; கையேந்தி நிற்காத சனங்கள் கைகட்ட வைக்காத கல்வி; இருந்தும்,

உழவனும் மீனவரும் உயிர்ப்பசை இன்றி இருப்பதால் கிராமத்தில் கேட்கவில்லை கெத்தாப்பான ஒலி கல்லால் கட்டி சிலையை உயர்த்தினர்- இப்போ சொல்லால் கொட்டி மனதை வீழ்த்துகிறார்கள் ஓலை வீட்டுக்குள் வளர்ந்த ஒற்றுமை ஓட்டு வீட்டுக்குள் ஓங்கவில்லை ஒடுங்கிவிட்டது.. அரைவயசு கூடினாலும் அண்ணன் என்ற காலம் அது நரைதெரியும் மூத்தவரையும் நக்கல் பண்ணும் உலகம் இது..

வியர்வையை சிந்தி வேளாண்மை செய்த நாட்களில் உண்டதெல்லாம் உடலை வளர்தது இரசாயனம் போட்டு இடும்பயிரை வளர்ப்பதனால்; இருப்பவர்களெல்லாம் இறந்து போகிறார்கள்

வானொலியும் தொலைக்காட்சியும் எல்லோருக்குமுண்டு உயர்சிதான் -ஆனால் ஆத்தையும், அழகம்மாவும் அரங்கேற்றிய தாலாட்டுப் பாடல்கள் தொலைந்து விட்டது, களறியில் ஆடி கவலையை மறந்த கணங்கள் சீரியலின் தினத் தொடருக்குள் சின்னாபின்னமாகிற்று

இந்தோ இந்தோ என்று எருவுக்கு மாடழைக்கும் சத்தம் ஏறப்பழுத்த மாவில் எக்காளமிடும் கிழியின் ஓசை கொக்கரக்கோ என கூவி எழுப்பும் கோழி காடுகள் அழித்த கட்டிடங்களுக்குள்ளும், காதுகள் கிழிக்கும் கனரக ஊர்தி ஒலியிலும் களையிழந்து போயிற்று.

எத்தனை இழந்தாலும் ஏதோ ஒரு உயிர்ஈர்பு இருக்கிறது என் ஊரின் முதுகில், மனிதங்கள் மாறினாலும், கடற்கரையிலும், ஆற்றோர வயலிலும் குளத்தை குளிர வைக்கும் மதுரை மரத்திடையேயும் மண்வாசைன மாறவில்லை

என் அப்பப்பா நடந்த வில்லுக்குள அளிப்பாடு பரப்பன் பற்றைக்குள் கீச்சிடும் சில்வண்டு சில மைகள் நடக்க வரும் வீரபத்திரர் கோயில் உப்பு வட்டிக்குள் இருக்கும் வெள்ளமண் ஓடை இன்னும் நிழல்தரும் கொம்புச்சந்தி வம்மிமரம் குதிப்பதற்கு ஏறிய பள்ளிக்குட வாகைமரம் நாங்கள் இரண்டு தலைமுறை சுற்றிய வைகாசுச் சடங்கு தோரணம் புழைய கதைபேசும் அழியாத சுவடுகள்! கேட்கத்தான் நேரமில்லை யாருக்கும்....

என்னதான் வெறுத்தாலும் என்னதான் மறுத்தாலும் இன்னும் அந்த மண்ணைச்சுற்றியே எங்கள் மனது மயங்கிக்கிடக்குது....