'ஆட்கள் இல்லாத பாதுகாப்பு வலயங்களில் வழிபாடு எதற்கு?' - இலங்கை இராணுவம்

Nov 30, 2013, 06:48 PM

Subscribe

'யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ மத வழிபாட்டுத் தலங்களை அழிக்கும் வேலையில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபட்டதில்லை. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பொய்யான செய்தியை அடிப்படையாகக் கொண்டு பரப்பட்டிருக்கிறது' என்று இலங்கை இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.

'சாதாரன பொதுமக்கள் வசிக்கும் எல்லா பகுதிகளிலும் உள்ள எல்லா கோவில்களிலும் பூசை வழிபாடுகளை நடத்துவதற்கு இராணுவத்தினர் ஒரு காலத்திலும் எந்தவிதமான இடையூறுகளையும் விளைவித்ததில்லை. யாழ்ப்பாணத்தில் மக்களின் வாழ்விடங்களில் மத சுதந்திரத்துக்கு எந்தவிதமான தடைகளும் கிடையாது' என்று இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

மக்கள் வசிக்காத அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடு நடத்த வேண்டும் என்று கோருவது நியாயமில்லை என்றும் இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு வலயங்களுக்குள் இருந்த இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்துமாமன்றம் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே பிரிகேடியர் இவ்வாறு கூறினார்.