“இந்தியர் அனைவருக்குமான பொது தலைநகராக தில்லி திகழவில்லை”

Feb 01, 2014, 05:03 PM

Subscribe

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இறந்ததை கண்டித்து இந்தியத் தலைநகர் தில்லியில் நூற்றுக்கணக்கான வடகிழக்கு மாணவர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். 20 வயதான நிடோ தானியா, சில தினங்களுக்கு முன்னதாக சில கடைக்காரர்களால், அவரது தோற்றம் குறித்து ஏளனம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். பல மணிநேரத்தின் பின்னர் அவர் மரணமடைந்தார்.

இது தொடர்பில் இருவர் கைது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதம் மற்றும் பாரபட்சம் ஆகியவற்றை கோடிட்டுக் காட்டுகின்றது.

தானியா மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க தாமதித்ததாக தில்லி காவல்துறை மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.

ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தலைநகராக இந்தியா இருந்தாலும், அது எல்லா இந்தியர்களுக்குமான பொதுத்தன்மையை இன்னமும் வளர்த்துக்கொள்ளவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காண்பிப்பதாக தில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்று ஆய்வுக்கான பேராசியர் எம் எஸ் எஸ் பாண்டியன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடகிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான கடுமையானதொரு இன வெறுப்பு மனநிலை தில்லியில் பரவலாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.