"ஹிந்துக்கள்" புத்தக சர்ச்சை "வருத்தத்துக்குரியது"
Share
Subscribe
சில இந்து ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் எதிர்ப்பால், அமெரிக்க ஆராய்ச்சியாளர் , வெண்டி டோனிகர் எழுதிய "ஹிந்துக்கள்- ஒரு மாற்று வரலாறு" என்ற புத்தகத்தை இந்தியாவில் வெளியிட்ட பெங்குவின் இந்தியா நிறுவனம், அந்தப் புத்தகத்தை விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டிருப்பது வருத்தத்துக்குரியது என்கிறார் இந்தப் புத்தகத்தை திறனாய்வு செய்த விமர்சகர் பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி. வெண்டி டோனிகர் சமய வரலாற்று அறிஞர், 50 ஆண்டுகளாக ஹிந்து சமயம் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார், அவரது இந்த 50 ஆண்டுகால ஆராய்ச்சியின் திரட்சியாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்,இதை ஆராய்ச்சியாளர்களும் மற்றவர்களும் படித்துப் பயன்பெறவேண்டும என்கிறார் வெங்கடாசலபதி. இந்துக் கடவுளர்களையும், இந்துச் சிலைகள் மற்றும் ஐதீகங்களை ஆபாசக் கண்ணோட்டத்தில் பார்க்கும் கருத்துக்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன என்று கூறப்படுவது பற்றி கேட்டபோது, இந்தப் புத்தகம் 750 பக்கங்களுக்கும் மேற்பட்டது, பல நூறு ஆராய்ச்சி நூல்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் கொண்ட துணை நூல்களின் பட்டியல் இருக்கிறது, இதில் கூறப்பட்டுள்ள எங்கோ ஒரு மூலையில் கூறப்பட்ட கருத்துக்களை அவை கூறப்பட்ட சூழலிலிருந்து பிய்த்தெடுத்துப் பார்ப்பது என்பது சரியானதல்ல என்கிறார் வெங்கடாசலபதி. ஆரோக்கியமான, திறந்த மனத்தோடு, இந்து மதத்தைப் பற்றி வரலாற்று ரீதியாகவும், ஆழமாகவும் படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் இது, இதைப் படிக்காமலிருப்பது ஒரு இழப்பு என்றும் அவர் கூறுகிறார். இந்தியாவில் இது போன்ற பிரச்சினைகள் எழுவது என்பது கருத்துரிமைக்கு விடப்படும் சவாலாகவே பார்க்கப்படவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இதற்கெதிராக, இந்திய அரசும், குடிமைச் சமூகமும் ஓரணியில் நிற்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
