மாவிலாற்றின் இன்றைய நிலை - பெட்டகம்

May 18, 2014, 12:10 PM

Subscribe

இலங்கையின் இறுதிக்கட்ட போர் ஆரம்பமாவதற்கு மாவிலாற்றை விடுதலைப் புலிகள் மூடியதே முக்கியக் காரணம் என்று இன்றளவும் பல்தரப்பில் கூறப்படுகிறது.

கிழக்கே திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்திலுள்ள மாவிலாற்றிலிருந்து சிங்கள மக்கள் விவசாயம் செய்யும் பகுதிகளுக்கு நீர் செல்வதை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தினர் என்று அரச தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அதை திறக்க வேண்டும் என்று அரசு விடுத்த அறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுதலைப் புலிகள் நிராகரித்தது அரசை சினமுறச் செய்தது.

இதையடுத்து இராணுவம் தலையிட்டு அந்த ஆற்றின் மதகுகளை திறந்ததே இறுதிக்கட்டப் போரின் துவக்கம் என்று கருதப்படுகிறது.

எனினும் நாட்டில் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின்னர் அங்குள்ள சூழல்கள் குறித்து பல்வகையான கருத்துக்கள் நிலவுகின்றன.

நல்லிணக்கம், வளர்ச்சி, சமாதானம் ஆகியவை ஏற்பட்டுள்ளதாக அரசு கூறினாலும், அப்படியானவை ஏதும் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு அங்கு நடக்கவில்லை என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

வடக்கே முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போர் தொடங்கிய மாவிலாறுப் பகுதியில் இன்று மக்களின் வாழ்க்கை எப்படியுள்ளது, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதைக் காணச் சென்றிருந்தார் நமது செய்தியாளர் இரா. உதயகுமார்.

அப்பகுதியில் தமிழ் மற்றும் சிங்கள விவசாயிகள் ஒன்றாக இணைந்து விவசாயச் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தாலும், இராணுவத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக ஒருவித அச்ச சூழலும் அங்கு நிலவுகிறது என்று அவர் கூறுகிறார்.

அவரது ஒலிப்பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.