"ஆளும் வர்க்க முதலாளிகளால் இலங்கை ஆடைத் தொழிற்சாலைகளில் சுரண்டல்"
Share
Subscribe
இலங்கையின் ஆயத்த ஆடை தொழில்துறையில் வேலைக்கு ஆள் தேவைப்படும் காலி இடங்களின் எண்ணிக்கை பதினையாயிரம் என்ற அளவில் உள்ளதாக இலங்கையின் முதலீடு அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னணி ஏற்றுமதித் துறையாக விளங்கும் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில், வேலைக்கு ஆள் தேவைப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை விவரம் பற்றி சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுசேவை தொழிலாளர் ஒன்றியத்தின் இணைச் செயலர் அண்டன் மார்க்கஸ் தமிழோசையிடம் விவரம் அளித்தார்.
காலியிடங்களின் எண்ணிக்கை பதினையாயிரம் என்ற நிலை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததாகவும், தற்போது அது மிகவும் அதிகமாக இருக்கலாம் என்றும் மார்க்கஸ் கூறினார்.
ஆயத்த ஆடை தொழில்துறையில் அதிகமாக வேலைசெய்பவர்கள் பெண்களே என்றும், பலவிதமான சுரண்டல்களுக்கு அவர்கள் ஆளாகிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த முதலாளிமார்கள் தொழிலாளர் சுரண்டலில் ஈடுபடுவதை அரசாங்கம் கண்டும் காணாமல் உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.
