“மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளவில்லை"

Aug 07, 2014, 05:24 PM

Subscribe

அடுத்த தமிழக சட்டமன்றத்தேர்தலில் தமிழக முதல்வர் பதவிக்கான திமுக வேட்பாளராக மு க ஸ்டாலின் அறிவிக்கப்படவேண்டும் என்று பகிரங்கமாக கோரியதற்காக திமுகவிலிருந்து நீக்கப்பட்ட திமுக அமைப்புச்செயலாளர் பெ வீ கல்யாணசுந்தரத்திற்கு பின்னணியில் இருந்தபடி மு க ஸ்டாலின் அவரை தூண்டிவிடவில்லை என்கிறார் திமுக செய்தித்தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன்.

மு க ஸ்டாலினின் மிக நெருக்கமானவராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தவரும் தி.மு.கவின் அமைப்புச் செயலாளருமான பெ.வீ. கல்யாணசுந்தரத்தை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக வியாழனன்று திமுக தலைமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கல்யாணசுந்தரம், "கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக அறிவதால், தி.மு.கழக அடிப்படை உறுப்பினர் உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாகத்" தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலாக தி.மு.கவின் சட்டப் பிரிவு செயலரான ஆர்.எஸ். பாரதி அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தி.மு.க. அறிவித்துள்ளது.

ஜூலை 30 ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் திமுகவை வலுப்படுத்த சில யோசனைகள் என்ற பெயரில் கட்சித் தலைமைக்கு, கடிதம் ஒன்றை கல்யாண சுந்தரம் எழுதியிருந்தார்.

அந்த கடிதம் நேற்று (ஜூலை, 6, 2014) ஊடகங்களில் கசிந்திருந்தது.

அந்தக் கடிதத்தில், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக மு.க. ஸ்டாலினை அறிவிக்க வேண்டுமென்றும், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

தவிர, சமீபத்தில் தி.மு.கவில் புதிதாக பிரிக்கப்பட்ட 65 மாவட்டங்களுக்கும் உடனடியாக பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் நில அபகரிப்புப் புகார், சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த முக்கியப் பொறுப்பும் வகிக்கக் கூடாது என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்தக் கடிதம் ஜூலை 30ஆம் தேதி எழுதப்பட்டும், தி.மு.க. தலைமை இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ கருத்து எதனையும் வெளிப்படையாக தெரிவிதிருக்கவில்லை.

இந்த பின்னணியில், தமது இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்யாணசுந்தரம் திமுகவின் கட்சிப் பொறுப்புகள் அனைத்திருந்தும் புதனன்று ராஜினாமா செய்துவிட்டதாக ஊடக செய்திகள் தெரிவித்திருந்த பின்னணியில் அவரை கட்சியில் இருந்தே நீக்கும் அறிவிப்பு இன்று வந்திருக்கிறது.

கட்சித்தலைவரான கருணாநிதிக்கும் அவரது அரசியல் வாரிசாக பார்க்கப்படும் அவரது மகன் மு க ஸ்டாலினுக்கும் இடையில் நடப்பதாக கருதப்படும் பனிப்போரில் கல்யாணசுந்தரம் தற்போது பகடைக்காயாக மு க ஸ்டாலினால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்று திமுகவின் எதிர்தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த விமர்சனம் தவறு என்று கூறும் டி கே எஸ் இளங்கோவன், கல்யாணசுந்தரத்தை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை மு க ஸ்டாலினும் சேர்ந்தே எடுத்தார் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.