"ஜெ.வுக்கு ஆதரவாக தனியார் பள்ளிக்கூடங்கள் ஒக். 7ஆம் தேதி மூடப்படும்"

Oct 05, 2014, 04:10 PM

Subscribe

தமிழக தனியார் பள்ளிக்கூட சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் இளங்கோவன் பேட்டி.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பில் வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்தும், அவரது விடுதலை கோரியும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் சார்பில் வரும் ஒக்டோபர் 7ஆம் தேதி திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவிருப்பதால் அன்றைய தினம் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தமிழகத்திலுள்ள தனியார் பள்ளி சங்கங்களுடைய கூட்டமைப்பான FAPSIT என்ற அமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் இருக்கின்ற பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தின் முன்பாக ஒக்டோபர் 7ஆம் தேதி தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகப் பெரிய கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக அதில் கலந்துகொள்வதற்காக தமிழகமெங்கிலிருந்தும் ஏராளமான தனியார் பள்ளிகளின் பொறுப்புதாரிகள் வர இருப்பதாலும், அன்றைய தினம் பள்ளிக்கூடங்களை மூட கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த தனியார் பள்ளி சங்கங்களுடைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக FAPSIT கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார். தமிழக முதல்வராக இருந்த சமயத்தில் ஜெயலலிதா நிறைய மாணவர் நலத் திட்டங்களை செயல்படுத்தியதால், அவருக்கு ஆதரவாக தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை செய்யவுள்ளதாக அவர் கூறினார். தனியார் பள்ளிக்கூடங்களின் சங்கம் ஒன்றினால் கடந்த 30ஆம் தேதி ஏற்கனவே ஒரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தாலும், அதில் நிறைய பள்ளிக்கூடங்கள் பங்குபெறவில்லை என்பதால், தற்போது பெரிய அளவில் இந்த கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். ஒக்டோபர் 7ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதால் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்காது என்றும், அன்றைய தினத்துக்கு மாற்றாக ஒரு சனிக்கிழமையில் பள்ளிக்கூடத்தை நடத்தி பாடங்களில் தொய்வு வராமல் பார்த்துக்கொள்ளப்படுமென்று அவர் கூறினார். இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்காக பள்ளிக்கூடங்கள் மூடப்படுவது பற்றி பள்ளி மாணவர்களிடமோ அவர்களது பெற்றோர்களிடமோ விவாதிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.