14 ஆண்டுகளில் 68 மடங்கு விலையுயர்ந்த தடுப்பு மருந்துகள்

Jan 20, 2015, 06:45 PM

சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலையை குறைக்குமாறும், அவை தயாரித்து விற்கப்படும் முறையில் மறுசீரமைப்புகளை செய்யுமாறும் சர்வதேச மருத்துவ தன்னார்வக் குழுவான எம்.எஸ்.எஃப் என்னும் எல்லைகளற்ற மருத்துவர்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

பல பொதுவான சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலை 2001ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்போது 68 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக அந்த அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.

அவற்றின் விலைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமலிருப்பதாக விமர்சித்துள்ள அந்த அமைப்பு, பல வளரும் நாடுகளில் நிமோனியா தடுப்பு மருந்துக்கு வளர்ச்சியடைந்த நாடான பிரான்ஸை விட அதிகமான விலையை கொடுக்க நேர்வதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த அமைப்பின் அறிக்கை பெருமளவு சரியானதே என்கிறார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் பி குகானந்தம்.

பல்வேறு தடுப்பு மருந்துகளின் தயாரிப்புச்செலவுகளையும் அதற்கான லாபத்தையும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே சம்பாதித்துவிட்ட பிறகு வளரும் நாடுகளிடமும் அவர்கள் அதிக விலைக்கு விற்பதில் நியாயமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.