பேஸ்புக்கின் புதியவிதிகள்: விமர்சனக்குரல்களை ஒடுக்குமா?

Mar 18, 2015, 02:20 PM

Subscribe

பேஸ்புக், அதாவது முகநூலில் இனிமேல் என்னென்னவையெல்லாம் அனுமதிக்கப்படும்; எவையெவையெல்லாம் அனுமதிக்கப்படாது என்பது குறித்த தனது புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆபாசமானவை, ஆபத்தை விளைவிப்பவை, தற்கொலை, கொலை போன்ற உயிர்ப்பலியை ஊக்குவிப்பவை, குற்றச்செயல் தொடர்புடையவை, துவேஷத்தை தூண்டுபவை, பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீதான வன்மான தாக்குதல் உள்ளிட்ட பலவிதமானவை இனிமேல் முகநூலில் அனுமதிப்படாது என்று முகநூலின் புதிய விதிகள் பட்டியலிட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறைகள் முகநூலை பாதுகாப்பான இணையத்தின் சமூகவெளியாக மாற்றும் என்றும், முகநூலின் ஆபாசத்தைக் கட்டுப்படுத்தும் என்றும் அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதேசமயம், இந்த புதிய விதிகள் அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான வலுவான கட்டமைப்புகளுக்கு எதிரான வெகுமக்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும்; கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் என்கிற கவலைகளும் சிலரால் வெளியிடப்படுகின்றன.

இந்த இருவேறுபட்ட நேரெதிர் நிலைப்பாடுகளில் எது சரி என்பது குறித்து சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடக செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவரும் லண்டன் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் முரளி ஷண்முகவேலன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் விரிவாக ஆராய்கிறார்.

ஆபாசம், கொலை, தற்கொலை மற்றும் வன்முறைகள் தொடர்பான முகநூலின் புதிய விதிகள் வரவேற்கத்தக்கவை என்று கூறும் முரளி ஷண்முகவேலன், துவேஷத்தைத் தூண்டும் பேச்சுக்கள், ஆபத்தை விளைவிக்கும் அமைப்புக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீதான கடுமையான தாக்குதல்களும் முகநூலில் இருந்து நீக்கப்படும் என்கிற முகநூல் நிறுவனத்தின் புதிய விதிகள் சர்ச்சையைத் தோற்றுவிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறார்.

காரணம் கடுமையான வரலாற்றுப்பார்வையுடனான விமர்சனமே கூட துவேஷத்தை தூண்டுவதாக விமர்சிக்கப்படுபவர்கள் தரப்பில் கூறப்படலாம் என்றும், ஒரு தரப்பினரால் ஆபத்தான அமைப்புக்கள் என்று கருதப்படும் அமைப்புக்கள் மறுதரப்பால் விடுதலைக்கான அமைப்புக்கள் என்று வாதாடப்படலாம் என்றும், பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீதான மோசமான தாக்குதல்கள் எவை எவை என்று வரையறை செய்வதில் சிக்கல்கள் தோன்றும் என்றும் முரளி ஷண்முகவேலன் கூறினார்.