உலகக் கோப்பை கிரிக்கெட்:ரசிகர்களின் எண்ணங்கள் என்ன?
Share
Subscribe
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதில் பங்குபெறும் நான்கு அணிகளின் பலம் மற்றும் பலவீனம், யார் கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பது பற்றி நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்று பிபிசி தமிழோசை கேட்டிருந்தது.
ஆயிரக்கணக்கான நமது நேயர்கள் அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு ஏராளமானோர் தமது கருத்துக்களை எழுத்து வடிவிலும், குரலில் ஒலிப்பதிவு செய்தும் அனுப்பியுள்ளனர்.
ஃபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்துள்ள சித்து நாகப்பன், டி வில்லியர்ஸ் தலைமையில் தென் ஆப்ரிக்கா கோப்பையை வெல்லும் என்று கூறுகிறார்.
பாலேந்திரன் தங்கராஜா எனும் நேயர் இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் மோதும், அதில் இந்தியா வெல்லும் என்கிறார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் பல்துறையில் திறமை வாய்ந்தவர்கள், அதிரடியாக ஆடக் கூடியவர்கள் எனவே வெற்றி வாய்ப்பு என்பது அவர்களுக்கு அதிகம் என்கிறார் சுந்தரலிங்கம் கிதூஷ்கன் எனும் நேயர்.
ஆனால் பரகத் அலி, நியூசிலாந்து என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டார்.
இதேவேளை சுவிட்சர்லாந்திலிருந்து நாதன் வைத்தியநாதன் மற்றும் தாய்லாந்திலிருந்து ராதாகிருஷ்ணன் முத்துகுமார் ஆகிய நேயர்கள் தமது கருத்துகளை ஒலிவடிவில் அனுப்பியிருந்தனர்.
இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையே இருக்கும் என்கிறார் பிரபுசரன் பிரபு எனும் நேயர்.
முசாமில் ஷெரீஃபோ தென் ஆப்ரிக்காதான் வெற்றி வாகை சூடும் என்று கூறுகிறார்.
சுமன் மரியா, ராஜ் குமார், ஸ்பீட் அருண், கனேஷ் கருப்பையா, சோம சுந்தரம் தோனி கௌதம், நிக்ஸன் தேவன், அழகர்சாமி திவாகர் ஆகிய நேயர்கள் இந்தியாவுக்கே வெற்றி என்று கூறுகிறார்கள்.
தாவடி காந்தன் அரையிறுதியில் போட்டியிடும் நான்கு அணிகளில் சிறந்த அணி நியூசிலாந்துதான் என்கிறார்.
மொஹமது ஜியாவுதீன் இறுதிப் போட்டி இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இருக்கும், அதில் இந்தியா வெல்லும் என்று நம்புகிறார்.
தென் ஆப்ரிக்காவுக்கும் நேயர்கள் மத்தியல் ஆதரவு உள்ளது.
ஆனால் விடிஸ் ராஜ் எனும் நேயரோ இந்தியா உலகக் கோப்பையை தூக்காது, தேநீர் கோப்பையைத்தான் தூக்கும் என்று நக்கலடித்துள்ளார்.
கருத்துக்களை தெரிவித்த அனைத்து நேயர்களுக்கும் பிபிசி தமிழோசையின் நன்றி.
