நேபாள விமானநிலையத்தில் குவியும் பல்லாயிரம் பேர்
Share
Subscribe
தொடர் நிலநடுக்கத்தினால் நிலைகுலைந்திருக்கும் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மின்விநியோகம் முற்றாக நிலைகுலைந்திருப்பதாகவும் தகவல் தொடர்பு கட்டமைப்பும் பெருமளவு செயற்படவில்லை என்றும் தெரிவிக்கிறார் நேபாளத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலர் கண்ணன்.
நேபாளத்தைவிட்டு வெளியேற விரும்பி நாட்டின் ஒரே சர்வதேச விமானநிலையமான காட்மாண்டு விமானநிலையத்தில் பல்லாயிரம்பேர் குவிந்து வருவதாகவும், அவர்களை சமாளிப்பதே பெரும் சவாலாக மாறிவருவதாகவும் அவர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் கூறினார்.
காத்மாண்டு விமான நிலையம் மிகச்சிறிய விமான நிலையம் என்பதால் அங்கே கூடுதல் விமானங்களை இயக்குவது இயலாது என்றும், அதிலும் நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நேபாள கட்டமைப்பு வசதிகளும் செயலிழந்துள்ள நிலையில் விமான நிலையத்தில் குவியும் ஆயிரக்கணக்கான பயணிகளை உடனடியாக வெளியேற்றுவது சிரமம் நிறையந்த செயல் என்றும் அவர் விளக்கினார்.
இரண்டாவது நாளாக தொடரும் மிகப்பெரிய நில நடுக்கங்கள், மோசமான வானிலை, தேவையான ஆளணி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் இல்லாமை; நேபாளத்தின் மலைப்பாங்கான நிலவியல் மற்றும் பொதுமக்களின் அதிகரித்த பயம் எல்லாம் சேர்ந்து நேபாளத்தின் மீட்புப் பணிகளை சவால் மிகுந்தவையாக மாற்றியிருப்பதாக கண்ணன் தெரிவித்தார்.
மேற்குலக நாடுகளைப்போல பேரிடர்கால தயாரிப்பு மற்றும் நிவாரணத்துக்கான கட்டமைப்புகள் இல்லாமையின் போதாமைகள் இது போன்ற சம்பவங்களின்போது கூடுதலாக வெளிப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம், இந்தியா உள்ளிட்ட அண்டைநாடுகளின் மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் முழுவீச்சில் நேபாளத்தில் பணிபுரிந்துவருவதாகவும் அவர் கூறினார்.
