தமிழகத்தின் பருத்தி விதைப் பண்ணைகளில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது
Share
Subscribe
இந்தியாவில் பருத்தி விதைப் பண்ணைகளில் வேலைசெய்து வந்த சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது. சிறார் தொழிலாளர்களைத் தடுப்போம், மற்றும் இந்தியாவுக்கான நெதர்லாந்து குழு ஆகிய தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய ஆய்வில் கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழகத்தில் பருத்தி விதைப் பண்ணைகளில் பயன்படுத்தப்பட்ட சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதிக்கும் பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இத்தொழில்துறையில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ள அதே வேளையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் பலன் அளித்துள்ளது
உள்ளூர் உதவி அமைப்புகளுடனும், உள்ளூர் அரசாங்கத்தினருடனும் சேர்ந்து முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் பலனாக தமிழ்நாட்டில் இந்த பலன் ஏற்பட்டுள்ளதாக யூனிசெஃப் நிறுவனத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற ஆர்.,வித்தியாசாகர் பிபிசியிடம் கூறினார். சிறார் தொழிலாளர்கள் எந்தப் பகுதியில் இருந்து வருகிறார்களோ அந்தப் பகுதிக்கே சென்று, அங்கு சிறார்கள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ள பிரச்சினைகளை கண்டறிந்து, அவர்கள் பள்ளி செல்லாமல் இருப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து, பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதன் மூலமாகவும், மாற்றத்தை கண்காணிப்பதன் மூலமாகவும், பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாமல் இருப்பதை தடுக்க கிராம பஞ்சாயத்துகளை ஊக்குவிப்பதன் மூலமாகவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட அளவில் குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படாததே அவ்விடங்களில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். 14 வயதுக்கு குறைவான பிள்ளைகள் வேலைக்கு செல்வதன் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் குறைந்திருந்தாலும், 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் வேலைக்கு செல்லும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், வேலை செய்யும் இடத்தில் அவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க சட்ட ரீதியான பாதுகாப்பும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
