மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் 9ஆம் பகுதி

Nov 22, 2015, 03:15 PM

Subscribe

நாகஸ்வரத்தின் உயிர் மற்றும் மூளை என்றெல்லாம் சிறப்பாகப் பேசப்படும் சீவாளியின் தயாரிப்பு, இன்றளவும் ஆங்காங்கே கைதேர்த ஒருசிலரால் மட்டுமே செய்யப்படும் குடுமபக் கைத்தொழிலாகவே உள்ளது. சீவாளி சரியாக அமையவில்லை என்றால், எப்பேற்பட்ட நாகஸ்வரக் கலைஞரின் திறமையும் முழுமையாக வெளிப்படாது என இசை அறிஞர்களும் ஆய்வளர்களும் கூறுகிறார்கள்.

அந்தத் தொழிலும் இப்போது பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என பாரம்பரியமாக அதில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

சீவாளி என்பதை பெரும் எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்ய முடியாது. அதை ஆட்கள் வைத்தும் செய்ய முடியாது.

குடும்ப கைத்தொழிலாகவே அதை செய்ய வேண்டும்.

தேவைப்படும் அளவுக்கு சீவாளியைச் செய்து கொடுக்க முடியாத நிலைதான் இன்றவும் உள்ளது என்கிறார் வர்த்தக்துறையில் முதுகலை பட்டம் பெற்று, குடும்பத் தொழிலான சீவாளித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள திருவாவடுதுறை முத்துராமன்.

சீவாளி ஒரே இடத்தில், ஒருவரால் தயாரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு நாகஸ்வரக் கலைஞரின் வாசிப்புத் திறமையில், வெளியாகும் ஓசை மாறுபடும் என்கிறார் மூத்த நாகஸ்வரக் கலைஞர் இஞ்சிக்குடி சுப்ரமணியம்.

சீவாளியைத் தயாரிப்பவர்களின் எதிர்காலம், நாகஸ்வரக் கலைஞர்களின் எதிர்காலத்தைப் பொருத்தே உள்ளது. நாகஸ்வரம் மற்றும் தவில் தயாரிப்பு போல, சீவாளித் தயாரிப்பும் குடும்பத் தொழிலாகவே இருக்கும் நிலையில், இவற்றை தயாரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், இந்தத் தயாரிப்புக் கலையை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க முன்வரவில்லை என்பது கசப்பான ஒரு உண்மையாகும். சீவாளித் தயாரிப்பில் உள்ள நெருக்கடிகள் குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இத்தொடரில் இப்பகுதியில் கேட்கலாம்.