வெள்ள நேரத்தில் இசைக்கச்சேரியா ? சென்னை மியுசிக் அக்காடெமி தலைவர் பதில்
Share
Subscribe
சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அடுத்து, நிலைமை இன்னும் இயல்பு நிலைக்கு வராத சூழலில், அங்கு ஆண்டுதோறும் நடக்கும் மார்கழி மாத இசைக்கச்சேரி சீசனை ரத்து செய்யவேண்டும் என்று முன்னணி கர்நாடக இசைக்கலைஞர் மும்பை ஜெயஸ்ரீ போன்றோர் கருத்து வெளியிட்டிருக்கும் நிலையில், இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஒன்பது சபாக்கள் விடுத்துள்ள அறிக்கையில், இது திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சபாக்களில் முன்னோடி சபாவான சென்னை மியூஸிக் அக்காடெமியின் தலைவர் என்.முரளி இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை ரத்து செய்வதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை, அவ்வாறு ரத்து செய்யப்பட்டால், இதை நம்பி இருக்கும் பல சிறிய இசைக்கலைஞர்களும் பாதிக்கப்படுவார்கள், என்றார்.
ஆனால் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு , கலைஞர்களும் சபாக்களும் உதவ வழி கிடைக்கும் என்றார் முரளி. சில கலைஞர்கள் இந்த இசை நிகழ்ச்சிகள் மூலம் தங்களுக்கு கிடைக்கும் வருமானம் அனைத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்துக்கு தந்துவிடுவதாகக் கூறியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
எனவே ஒன்பது சபாக்கள் சேர்ந்து இந்த மார்கழி இசைக்கச்சேரிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அர்ப்பணிக்கும் வகையில் நடத்தப்படவிருப்பதாக அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் சபாக்கள் மற்றும் கலைஞர்கள் பெறும் வருமானத்தில் அவர்களது சக்திக்கேற்ற வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தருவார்கள் என்பதுதான் தங்களது நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.
இந்த வெள்ளம் முன்னுதாரணமற்ற ஒன்றாகும் என்று கூறிய முரளி, இது அனைத்து சபாக்களுக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயம்தான் என்றார். இசை மற்றும் பிற கலைகளுக்கு வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் ஏற்பட்ட மனப்புண்களை ஆற்றும் ஒரு மருந்தாக விளங்கும் சக்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
