மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் 12ஆம் பகுதி
Share
Subscribe
தமிழர்களின் பாரம்பரிய அடையாளம் மற்றும் கலாச்சாரத்தில் முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ள மங்கல இசை, கடந்த பல தசாபதங்களாகவே மாறிவரும் நாகரீகச் சூழல், சமூக பொருளதார நிலை, போதிய ஆதரவின்மை போன்ற பல காரணங்களால் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாகவே அந்தக் கலை நலிவடைந்து வருவதை யதார்த்த ரீதியில் பார்க்கவும் முடிகிறது.
ஆனால் அவ்வப்போது அந்தக் கலைக்கு மக்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி, ரசிகர்களை தமது வசம் வைத்திருக்க பல கலைஞர்களும் ஆர்வலர்களும் நூதனமான பல முயற்சிகளை எடுத்தனர்.
இவர்களில் ஒரு முன்னோடியாக பார்க்கப்படுபவர் கல்யாணபுரம் கணேசப்பிள்ளை.
தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள சிறு கிராமமான கல்யாணபுரத்திலுள்ள ஆலயம் ஒன்றில் இன்றளவும் அவர் கைங்கரியம் செய்து வருகிறார். கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக நாகஸ்வரக் கலைஞராக பரிமளித்து வரும், இசைத்துறையில் மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆளுமையாகவும் உள்ளார்.
பல தசாபதங்களுக்கு முன்னரே நாகஸ்வரக் கச்சேரிகளில் கந்தர் சஷ்டி கவசத்தை இசைக்கும் ஒரு வழக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.
மூத்த தவில் கலைஞரும், அண்ணாமலை பல்கலைகழகத்தில் இசைத் துறைத் தலைவராகவும் இருந்த அரித்துவாரமங்கலம் பழனிவேல் அவர்கள் தவில் வாசிப்பு மட்டுமன்றி, நாகஸ்வரத்துக்கு அப்பாற்பட்டு வேறு சில வாத்தியங்களுடன் இணைந்து வாசிக்கும் முன்னெடுப்பைச் செய்தார். அதற்கு வரவேற்பு விமர்சனம் இரண்டுமே இருந்தது.
கடந்த 1980களின் அரம்பங்களிலேயே மங்கல இசைக் கலைஞர்களை மட்டுமே ஊக்குவிப்பதற்காக நாகஸ்வராவளி எனும் ராகத்தின் பெயரில் ஒரு அமைபை சொந்த செலவில் ஏற்படுத்தி மாதம் ஒரு நாகஸ்வரக் கச்சேரி எனும் முனைப்பை முன்னெடுத்து அதனால் கையைச் சுட்டுக் கொண்டவர் தஞ்சையிலுள்ள இசை ஆர்வலர் நாகராஜன் சிவராமகிருஷ்ணன். அவரின் முன்னெடுப்பும் வெற்றி பெறவில்லை.
இந்தக் கலைக்கு ஒரு ஏற்றம் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில், மங்கல இசையையும் அதை வாசிக்கும் கலைஞர்களின் பாத்திரங்களையும் மையப்படுத்தி திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. ஆனால் அவற்றில் தில்லானா மோகனாம்பாள் படம் பெற்ற வெற்றியை வேறு எந்தப் படமும் பெறவில்லை.
பாரம்பரியக் கலைகளை ஊக்குவிக்க வேண்டும், அவற்றுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனும் நோக்கம் தமிழ் சினிமாவில் என்றுமே இருந்ததில்லை என்கிறார் திரைப்பட ஆய்வாளரும் விமர்சகருமான தியோடர் பாஸ்கரன்.
பலர் பலவிதமான நூதன முயற்சிகள் எடுத்தும் மங்கல இசைக்கான ஆதரவை மேலோங்கச் செய்ய முடியவில்லை. மெல்ல மெல்ல அந்தக் கலை சமூகத்தில் தனது நிலையை இழக்கத் தொடங்கியது. மங்கல இசையை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட பல முயற்சிகள் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இத்தொடரின் இப்பகுதியில் கேட்கலாம்.
