மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் 15ஆம் பகுதி
Share
Subscribe
தமிழ் மக்களின் வாழ்வோடு பல நூற்றாண்டு காலமாக நெருங்கித் தொடர்புபட்டிருந்த நாகஸ்வர-தவில் இசை இன்னும் எவ்வளவு காலம் தழைத்திருக்கும் எனும் கவலைகள் ஒருபுறம் இருந்தாலும், அதை அழிவிலிருந்து தடுத்து புதுப்பிப்பதற்கான முயற்சிகள் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் மிகப் பெரிய கேள்வி, அந்த முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதே? ஆலயங்களை ஒட்டியே தோன்றி வளர்ந்து வந்த கலைக்கு மீண்டும் ஆலயங்கள் மற்றும் அரசிடமிருந்து ஆதரவு கிடைத்தால் மட்டுமே அந்தக் கலையை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்கிறார், தொல்லியல் வல்லுநரும், இசை ஆர்வலருமான் டாக்டர் சத்தியமூர்த்தி ஆலயங்களுக்கு அப்பாற்பட்டு, மாறியுள்ள சமூகச் சூழலில் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் இசை அமைப்புகளுக்கு இந்தக் கலையை அழிவிலிருந்து மீட்பதிலிருந்து முக்கியப் பங்கு உள்ளது என்கிறார் பத்திரிகையாளர் பகவதி கோலப்பன் தற்காலத்தில் இசை அமைப்புகள் உள்ளரங்குகளிலேயே கச்சேரிகளை நடத்துவதால், நாகஸ்வரம்-தவில் இசைக்கு அதிக வாய்ப்புகள் அளிக்க முடியாத சூழல் உள்ளது என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார், சென்னை மியூசிக் அகாடமியின் தலைவர் என் முரளி. தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் பல்லாயிரம் ஆலயங்கள் இருக்கும் சூழலில், அதில் மூன்றில் ஒரு பங்கு ஆலயத்தில் அரசு மங்கல இசைக் கலைஞர்களை நியமிக்க முன்வந்தால், அதுவே பெரும் ஊக்கமாக இருக்கும் என்று கருதுகிறார் சத்தியமூர்த்தி ஷேக் சுபானி-காலிஷா பீ தம்பதியினர் இலவசமாகவே நாகஸ்வர இசையை கற்றுக் கொடுக்கத் தயார் என்கிறார்கள். ஆலயங்களில் இயந்திர மணியோசை என்று ஒலிக்க ஆரம்பித்ததோ அன்றே மங்கல இசைக்கு கடைசி மணி அடிக்கப்பட்டுவிட்டது என்று பலர் ஆதங்கப்படுகின்றனர். அரசு, ஆலயங்கள் ஆகியவை உரிய நடவடிகைக்க எடுத்து மங்கல இசைக்கு போதிய ஆதரவை வழங்காத சூழலும், ரசிகர்கள் தமது ஆதரவை தெரிவிக்காத நிலையும் வந்தால், இனிவரும் காலங்களில் இந்த வாத்தியங்கள் மற்றும் இசைக் குறிப்புகளை அருங்காட்சியங்களிலேயே காண வேண்டிய துர்பாக்கியம் ஏற்படலாம் என வருந்துகிறார் இசை அறிஞரும், ஆய்வாளருமான பி எம் சுந்தரம். ஒரு சமூகம் தனது அடிப்படை அடையாளங்களில் ஒன்றை இழக்க முடியுமா என்பதே, இப்போது விடை தெரியாமல் இருக்கும் வினாவாக உள்ளது. தமிழ் சமூகத்திலுள்ள அனைவரும் இதுகுறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது என்பதை இத்தொடருக்கான பயணித்து பலருடன் உரையாடியபோது அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இத்தொடருக்காக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொண்டு சிவராமகிருஷ்ணன் தயார்த்து வழங்கிய இத்தொடர் முடிவுக்கு வருகிறது.
