'என் மீதான குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு அரங்கேறிய நாடகம்' : தமிழ்மாறன்

May 24, 2015, 04:22 PM

புங்குடுதீவில் வித்யா என்ற பள்ளிச்சிறுமி கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று நம்பப்படும் சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல உதவியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வி.டி. தமிழ்மாறன் நிராகரித்துள்ளார்.

சிலர் திட்டமிட்டு தன்மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை பரப்பிவருவதாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் பீடாதிபதி தமிழ்மாறன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர் தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் பொலிஸ் அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டதாகவும் சந்தேக நபரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்காக தனது வாகனத்தை கொடுத்து உதவியதாகவும் தமிழ்மாறன் கூறினார்.

'நீண்டகாலமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகத்தின் காட்சியே' தன் மீதான குற்றச்சாட்டுக்கள் என்றார் தமிழ்மாறன்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக செய்திகள் ஏற்கனவே பரவியிருக்கின்ற நிலையில், தனது அரசியல் பிரவேசத்தால் தங்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று நினைப்பவர்களே இவ்வாறான அவதூறான பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள் என்றும் தமிழ்மாறன் கூறினார்.

வி.டி. தமிழ்மாறன் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த விளக்கத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்